முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர். சுமார் 03 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம் என்று அந்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மினுவாங்கொட பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று உடுகம்பொல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைத் தவிசாளரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு இன்று சபைக்கு வந்துள்ளனர். அரசியல் பழிவாங்கல் தவிர ரணில் மைத்திரி அரசாங்கத்துக்கு செய்வதற்கு வேறொன்றுமில்லை என்று மினுவாங்கொட பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளார்.