ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பை மேற்கொள்ள தொலைபேசியில் மூன்று முறை முயற்சித்துள்ளார். இருப்பினும், அது முடியாமல் போயுள்ளது. பின்னர் இது தொடர்பில் அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரியவிடம் கடத்தப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இச்செய்தி அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு கரு ஜயசூரியவால் எடுத்துக் கூறப்பட்டதாகவும் அத்தகவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நொயார், தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் வீசப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.