பத்திரிகை அறிக்கை

அன்பார்ந்த தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்!

புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெகுஜன அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டுநாள் எதிர்வரும் 18.09.2018 ஆகும்.

ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக்கூடிய தேக்க நிலையை ஈடுகட்டும் வகையிலும், பரந்துபட்ட அளவில் எமது மக்களின் அனைத்து பிரிவினரையும் விடுதலைப் போராட்டத்தின்பால் அணிதிரட்டக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, இந்திய படைகளின் இருப்புக்கு மத்தியிலும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக, வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலுடன் தனது முதலாவது வெகுஜன போராட்டத்தை நடாத்தியிருந்தது. தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், அன்றிலிருந்து இன்று வரை, தனது போராட்டப் பாதையில் ஏற்ற இறங்கங்களுடனும், வெற்றி தோல்விகளுடனும் பயணித்திருந்தாலும், எமது மக்களின் அடிப்படையான தேவைகளை இனங்கண்டு அதன் அடிப்படையில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை மிகவும் தன்னம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும், கட்சிக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை பொருட்படுத்தாமலும் முன்னெடுத்து வந்திருந்தது.

எமது இன்னுயிர் தோழர்கள் பலரை இழந்து அன்று நாம் முன்னெடுத்த ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அனைவருமே, வெவ்வேறு காலகட்டங்களில் அவற்றை தமது அரசியல் ரீதியான அணுகுமுறைகளாகவும் நடைமுறைகளாகவும் நடைமுறைப்படுத்தி வருவதை வரலாறு தெளிவாகக் காட்டி நிற்கிறது.

மக்கள் நலன், இன ஐக்கியம், தமிழ்த் தேசியத்தின் பாதுகாப்பு போன்ற அடிப்படைகளில் பல தரப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியிலும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து பயணிப்பதையே இன்றும் நாம் எமது இலக்காகக் கொண்டுள்ளோம்.

கடந்து வந்த போராட்டப் பாதையில் நாம் கண்ட சோதனைகள், இழப்புகள், துரோகத்தனங்கள் என அனைத்தையும் நினைவிற்கொண்டும், அரசியல் அரங்கின் கடந்தகால நிகழ்வுகளை அனுபவங்களாகக் கொண்டும் எமது கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், ஆரோக்கியமான, அறிவுபூர்வமான அரசியல் தலைமைத்துவத்தை தமிழ் மக்களின் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் உருவாக்கிக் கொள்ளவும் உறுதி பூணுவோம்.

எமது மக்களுக்கும் கட்சியின் கட்டமைப்புக்களிற்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளிகளை நீக்க முயல்வோம். ஆரம்ப காலங்களில் செயற்பட்டதுபோல, மக்களோடு இணைந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெகுஜன முன்னணியாக மீண்டும் புதுப்பலம் பெறுவோம்.

எம்மோடு பயணித்து கட்சியின் உயரிய நோக்கங்களுக்காக இன்னுயிர்களை ஈந்த கழக கண்மணிகளின் கனவுகளை வெற்றிகொள்ள உழைத்திடுவோம்.

அடுத்து வரும் ஒரு மாத காலப் பகுதியில் தாயகத்தில் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகப் பிரிவும் தம்மாலான மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுச்சிக்காக பயனுள்ள திட்டங்களை மக்கள் நலன் விரும்பும் கொடையாளிகளுடன் இணைந்து செயற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம்.

இரத்ததானம்,

மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பொது இடங்களிலும் சுகாதார நலன் பேணும் நோக்கிலான சிரமதானங்கள்,

வறிய குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையிலான விவசாய பயிர் கன்றுகளை வழங்குதல்,

கட்சியின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய கலந்துரையாடல்களையும் கருத்தரங்குகளையும் மிகவும் கீழ் மட்டத்தில் கிராமங்களில் இருந்து முன்னெடுத்தல், போன்ற மக்களோடு இணைந்த பணிகளை மேற்கொள்ள தோழர்கள் முன்வரவேண்டும் என விரும்புகிறோம்.

உங்களுடைய, உங்களுக்கு நெருக்கமானவர்களினது வலைத்தளங்களில் எமது தோழர்களின் தியாகங்கள், செயற்பாடுகள், சாதனைகளை வெளிப்படுத்தும் தரவுகளை பதிவிடுங்கள்.

மூன்று தசாப்தமல்ல, இன்னும் பல சகாப்தங்கள் எமது மக்களின் காவலர்களாக செயற்படக்கூடிய அமைப்பாக, சமூக நீதியை கட்டிக்காத்து நிற்கக்கூடிய கட்சியாக, இளைஞர்களினதும் பெண்களினதும் உரிமைகளை பேணிப்பாதுகாக்கக்கூடிய ஒரு பேரியக்கமாக எமது கட்சியை வளர்த்திடுவோம் என உறுதி கொள்வோம்.

தலைமைப் பணிமனை
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
17.08.2018.