மட்டக்களப்பு – புனானை ஆற்றில் குளிக்கச்சென்ற பெண் ஒருவர் முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானை கிழக்கு பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக நீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியை அடுத்து, கிணறுகளிலுள்ள நீர் வற்றியுள்ளமையால், குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக புனானை ஆற்றுக்கே மக்கள் செல்கின்றனர். புனானை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 74 வயதான பொன்னன் மாரியாயி நேற்று முற்பகல் 11 மணியளவில் குளிப்பதற்காக புனானை ஆற்றுக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஆற்றிலிருந்த முதலை இவரை நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.நேற்று முதல் இவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்று பிற்பகலே உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 பிள்ளைகளின் தாயான பொன்னன் மாரியாயி உயிரிழந்ததை அடுத்து, ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை நேற்று சில நீர் தாங்கிகளை தமது பிரதேசத்தில் வைத்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

பல வருடங்களாகக் காணப்படும் புனானை கிழக்கின் நீர்ப் பிரச்சினையை போக்க, நேற்று எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஏற்கனவே எடுத்திருந்தால் ஓர் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.