இராமாயணத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலான தொடருந்து சேவைத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலாவது தொடருந்து சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி புதுடில்லியில் ஆரம்பமாகி, அயோத்தியில் முதலாவதாக தரித்து, பல பிரதேசங்களின் ஊடாக இராமேஸ்வரம் பயணிக்கவுள்ளது. இந்த நிலையில், இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கான யாத்திரிகர்கள் கொழும்பின் ஊடாக ரம்பொடை, நுவரெலியா மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய தொடருந்து சேவையினால், விசேடமாக வழங்கப்படும் இந்தச் சேவையில் 800 யாத்திரிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன்போது, யாத்திரிகர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, சலுகை அடிப்படையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.