காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரரை காணவில்லை என, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாயை சேர்ந்த பியந்த (வயது 25) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீரர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே, காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் கடற்படை முகாமில் இருந்து ஆயுதங்கள் எதுவுமின்றி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் முகாமுக்கு குறித்த வீரர் திரும்பாததால் கடற்படையினர் அவரை தேடிய போது, வீரர் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் தையிட்டி பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த வீரரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில், கடற்படை முகாம் பொறுப்பதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்ததுடன், தம்மால் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.