அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சுகாதார துறையினரால் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் ஆளனி மற்றும் பௌதீக வளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை முன்பு இருந்தது போல் அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்து இன்று இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இக் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்பச் செயலாளர் வைத்தியர் கோல்டன் பர்ணாந்து அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்பச் செயலாளர் வைத்தியர் கோல்டன் பர்ணாந்து அவர்கள் இந்த செய்தியை ஜனாதிபதியிடம் வழங்கி சிறப்பான தீர்வை பெற்றுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஒரு சமூகம் ஆரேக்கியமானதாக அமைய வேண்டுமென்றால் அச்சமூகத்தின் சுகாதார சேவைகள் உயர்வானதாகவும் நவீனத்துவமானதாகவும் அமைய வேண்டும். அப்போது உடல் உளம் ஆரோக்கியம் பெற்று கல்வி மற்றும் இதர முன்னேற்றங்களில் குறிப்பிட்ட சமூதாயம் புத்துயிர் பெற முடியும். எங்கு சுகாதார நிலமைகள் நலிவடைகின்றதோ அங்கு சமூதாயம் பல வாழ்வியல் பிரச்சினைகள் தொடர்ச்சியாக சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தோற்றுவிக்கப்படலாம்.

இந்த சேவையினை மக்களுக்கு சிறப்பாக வழங்க வேண்டுமெனில் ஆளணி பௌதீக வளங்கள் மற்றும்; காலத்துக்கு காலம் அரசியல், பிரதேசவாதம் மற்றும் இனரீதியாக பக்கசார்பற்ற முறையில் நாடடின் தலைவர்கள் அத்துறைசார்ந்த அரசியல் வாதிகள் அதிகாரிகள், சேவையாளர்களின் மனநிலை மாற்றங்களுடன் முன்னேற்றமான அதிநவீன வைத்திய சாதனங்களுடன் சுகாதார சேவைகள் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்துள்ளது.

இந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 30 வருட யுத்தம் காரணமாக மாவட்ட வைத்தியசாலை காணப்பட்டதுடன் கடந்த வருடம் 2017.01.01 திகதி ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்ந்தப்பட்ட போதிலும் வைத்தியசாலையின் பெயர் பலகைக்கு அமைவாக எந்தவிதமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் பாரியளவில் இடம்பெறவில்லை என்பது இப்பிரதேச மக்களின் கவலையாக இருப்பதுடன்; இப்பிரதேசத்திற்கு வருகை தருகின்ற அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் மன்றாட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாகவே திருக்கோவில் பிராந்திய மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு சொல்வோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வைத்தியசாலையின் குறைபாடுகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்பச் செயலாளர் வைத்தியர் கோல்டன் பர்ணாந்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது

திருக்கோவில் வைத்தியசாலை சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு வைத்தியசாலையாக இருக்கின்ற போதிலும் இவ்வைத்தியசாலையில் பல்வேறுபட்ட பௌதீக மற்றும் ஆளணி குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும், சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட இப்பிரதேசத்தில் வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு 300 தொடக்கம் 400 வரையான வெளி நோயாளிகள் தினமும் சிகீச்சைப் பெற்று வருகின்றனர்.

இருந்த போதிலும் இவ் வைத்தியசாலையில் மக்கள் நம்பிக்கையற்ற மனநிலையில் உள்ளனர்.காரணம் இங்கு நோயாளிகள் எதிர்பார்க்கின்ற விதத்தில் நோய்களுக்கான நிவாரணிகளை பெற்றுக் கொள்ளக் முடியாது இருப்பதாகும். இவ் வைத்தியசாலையானது திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ளதுடன் பிரதேச மக்களின் சுகாதார தேவைகள் மாத்திரமின்றி ஏனைய பிரதேச மக்களுக்கான சேவையை வழங்கக்கூடிய வகையில் இவ் வைத்தியசாலை அமைந்திருப்பது முக்கிய விடயமாகும்.