வடக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா முன்வந்துள்ளது. இலங்கையின் வடக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தென்பகுதிக்கு மட்டுமல்லாது, வட பகுதி மக்களுக்கும் வீடுகள், மற்றும் வீதி நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்கட்டியெழுப்புதல் தொடர்பாக இலங்கைக்கு சீனா உதவத் தயாராக உள்ளதாக கொழும்பில் சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் லுவா சொங் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், தற்போது இலங்கையின் நிலைமை பாரிய அளவில் மாற்றமடைந்துள்ளதால் தமிழ் மக்களும் அதன் பயனை அடைவதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம், சீன நிறுவனம் ஒன்று 40 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று பெறப்பட்டுள்ளது. இதற்காக 30 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஏனைய நிர்மாண நிறுவனங்களைவிட குறைந்த செலவில் வீடுகள் மற்றும் வீதிகள் போன்றவற்றை தம்மால் நிர்மாணிக்க முடியும் என சீனா தெரிவித்துள்ளது.