முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக, 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து, ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’ எனும் அமைப்பால், எதிர்வரும் 28ஆம் திகதி காலை தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மகாவலி அதிகாரசபையால், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில், தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள பெம்பான்மையின மக்களுக்கு, காணி உத்தரவு பத்திரங்களை, மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணைந்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பு ஒன்றை ஸ்தாபித்துள்ளனர். இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி காலை 11மணி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய தொடர் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்க ள், கல்வியலாளர்கள், நடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இளைஞர், யுவதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.