தமிழர்களின் பூர்வீக பூமியை கபளீகரம் செய்யும் மகாவலிக்கெதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் பூரண ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரால் தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்து குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயக பிரதேசம் என்பதும் அப்பூர்வீக நிலத்தில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கும் வரலாற்றுச் சான்றுகள் பலவுள்ளன. அது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமொன்றாகவும் உள்ளது.

அவ்வாறிருக்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் தி;ட்டத்தின் பெயரால் பல்வேறு குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக மகாவலி நீரை கொண்டுவரமுடியாத பிரதேசங்களைக்கூட அத்திட்டத்தினுள் உள்வாங்கி திட்டமிட்ட குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக 1984ஆம் ஆண்டுமுதல் முல்லைத்தீவில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் செவ்வனே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பலதடவை நாம் அரசாங்கத்தில் உள்ள பல மட்டத்தினருக்குச் சுட்டிக்காட்டியபோதும் அதனை கருத்தில் எடுத்து மகாவலி திட்டத்தினை மீளாய்வு செய்திருக்கவில்லை. குறிப்பாக மகாவலி எல் வலயத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையினால் கபளீகரம் செய்யப்படுகின்றன.

ஆகவே, இத்தகைய செயற்பாடுகள் தற்காலத்திலும் தொடர்ந்து செல்வதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை. அதனடிப்படையில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பெயரால் நடைபெறும் எமது மக்களுக்குச் சொந்தமான நிலக்கபளீகர எதிர்ப்புப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவுள்ளோம்.

(நன்றி : தினக்குரல் 27.08.2018).