தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதேசத்திலுள்ள குடிநீர் பிரச்சனையுள்ள கிராமங்கள், மற்றும் அரச அலுவலங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், மரணவீடுகள், பொலிஸ் நிலையங்கள், பொதுமக்களின் விஷேட நிகழ்வுகளுக்கும் தங்குதடையின்றி பிரதேச சபையின் பவுசர் மூலம் நாளாந்தம் குடிநீர் வழங்கிவருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார். இவ்விடயம் குறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவிக்கையில், போரதீவுப்பற்றில் பிரதேச சபைக்குரித்தான 78 நீர்தாங்கிகளும், கிராம அபிவிருத்தி சங்கங்களுடைய 20 நீர்தாங்கிகளும் பொதுவிடங்களில் வைக்கப்பட்டு குடிநீர் வழங்கல் சீரான முறையில் இடம்பெற்று வருகின்றன.

போரதீவுப்பற்று பிரதேசம் வரட்சியால் பாதிக்கப்பட்டாலும் பிரதேச சபையின் பவுசர்களையும், ஆளணிகளையும் பயன்படுத்தி தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் மக்களுக்கு, வழங்கப்படுகின்றன.

இவ்வாறு நாளாந்தம் 70000 லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள வெல்லாவெளிக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக்குளம், பொறுகாமத்துக்குளம், பழுகாமத்தில் அமைந்துள்ள குளம் உள்ளிட்ட அனைத்து சிறிய குளங்களும் முற்றாக வற்றிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த வியாழக் கிழமை இரவும், வெள்ளிக்கிழமை இரவும், அப்பகுதியில் சிறியளவான மழை பெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.