பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நேற்று மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கரமசிங்க,

பூகோளவியல் மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வலய நாடுகளுக்கு முடியாமற்போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அதற்காக சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்கும் இந்திய முதலீடுகளை அதிகரித்தல், வீடமைப்பு, துறைமுகம் மற்றும் விமான சேவை போன்ற பல துறைகளுக்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமின் பிரதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரான பாம்-பின்-மின்னையும் சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.