பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றையதினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மைக்காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றையதினம் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டியும் நாளையதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,

கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடைமைகள் சில கிளிநொச்சி – அம்பாள்குளத்தின் கலிங்குப் பகுதியில் வைத்து இன்றுகாலை 11 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்து குறித்த பெண் அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேல் ஆடை, அவருடைய தேசிய அடையாள அட்டை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.

இதேவேளை குறித்த பெண், கயிறு ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக, உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், கொலை செய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடதுபுற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் 32 வயதுடையவரெனவும் கணவரைப் பிரிந்து வாழ்பவரெனவும் இவருக்கு 5வயதில் பெண் பிள்ளையொன்று இருப்பதாகவும் குறித்த பிள்ளை மாற்றுத்திறனாளியெனவும் பொலிஸ் விராரணைகளில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைகளையடுத்து பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் இக்கொலை தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த பெண்ணின் கையடக்கத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிசாரால் சந்தேக நபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கையடக்கத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிசாருக்கு தேவையான இடங்களிலுள்ள கண்காணிப்புக் கமராக்களின் பிரதியினைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று கோரியுள்ளனர்.