உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று கிடைக்கிறது.

நேபாளின் காத்மண்டு நகரில் நடைபெற்றுவரும் பிம்ஸ்டெக் அரச தலைவர்களது மாநாடு, இன்று நிறைவுபெறவுள்ள நிலையிலேயே, அதன் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு வழங்கப்படவிருக்கின்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக, உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து, ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது, உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக அமைந்துள்ளதாகவும் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனும் பிம்ஸ்டெக் அமைப்பின் நான்காவது அரச தலைவர்களின் சந்திப்பில், நேற்று பிற்பகல் உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களால் வலயப் பொருளாதார திட்டங்கள் சவாலை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அத்துடன் அதிகரித்து வருகின்ற வறுமை காரணமாக பாரிய பொருளாதார சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும், அச் சவால்களை தீர்ப்பதற்கு வலய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

வங்களா விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் பிம்ஸ்டெக் மாநாட்டின், நான்காவது அரச தலைவர்கள் சந்திப்பு ‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற கருப்பொருளின் கீழ் நேற்று (30) தலைநகர் கத்மண்டுவில் நோபாளப் பிரதமரின் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வங்களா விரிகுடாவை அண்மித்த நாடுகளின் பங்களிப்பால் அமைக்கப்பட்டுள்ள பிம்ஸ்டெக் அமைப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதென்று தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையே காணப்படும் பொதுவான வரலாறு மற்றும் கலாசார உரிமைகள், அந்நாடுகளுக்கிடையிலான பல்தரப்பு புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர கௌரவத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கையினாலும் புரிந்துணர்வினாலும் பிம்ஸ்டெக் இலட்சியங்களை அடைவது எளிதாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் மாநாட்டின் கொள்கையின் படி பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் போது ஊழல், இலஞ்சம், சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்துவதை எதிர்த்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, கடந்த மூன்றரை வருடங்களாக இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துவதுடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சி பேதமின்றி ஊழல் புரிந்தோருக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்ததாகவும் சட்டத்தின் ஆளுமையை வலுவூட்டி, நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிம்ஸ்டெக் மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கும் இலட்சியங்களை அடைந்துகொள்வதற்கு மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

பன்முக இலட்சியங்களையுடைய பிம்ஸ்டெக் அமைப்பு எத்துறைக்குள்ளும் வரையறுக்கப்பட தேவையில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பிம்ஸ்டெக் அமைப்பின் 20 வருட அனுபவத்தை உபயோகித்து கலாசார சின்னங்களின் பெருமையை பாதுகாத்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றல், மாநாட்டின் சிறப்பம்சமாக விளங்கியதுடன், ஜனாதிபதியினால் ஆற்றப்பட்ட உரை அரச தலைவர்களின் பாராட்டைப் பெற்றது.