வவுனியாவில் நிலவும் வரட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 171 குடும்பங்களை சேர்ந்த 474 பேரும் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களை சேர்ந்த 446 பேரும் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 334 குடும்பங்களை சேர்ந்த 1309 பேருமாக மொத்தம் 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதிகள் பிரதேச செயலங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. அனர்த்த முகாமைத்து நிலையத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை குளங்களில் நீர் வற்றிப் போயுள்ளதால் கால்நடைகள் நீரின்றி தவிப்பதோடு, விளைநிலங்களும் காய்ந்து போயுள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.