இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2018) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. அமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் திரு. க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றதுடன், பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (தலைவர், வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம்), சொஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், துர்க்கா தேவஸ்தானம், தெல்லிப்பளை) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றினார்.

நினைவுதின நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், பரஞ்சோதி, தர்மலிங்கம், சிவயோகன், உடுவில் பிரதேசசபைச் தலைவர் தர்சன், மானிப்பாய் பிரதேசசபைத் தலைவர் ஜெபநேசன்,

கோப்பாய் பிரதேசசபைத் தலைவர் நிரோசன், பிரதேசசபை நகரசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் முக்கியஸ்தர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், மதியம் 12மணியளவில் தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான மண்டபத்தில் அன்னாரின் நினைவாக அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை 5மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வைத்தியக்கலாநிதி தியாகராஜா, விரிவுரையாளர் பத்மரஞ்சன் ஆகியோர் உரையாற்றியதோடு, அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் கௌரிகாந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் கோப்பாய் பிரதேசசபைத் தலைவர் நிரோசன், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.