சுமந்திரனின் வயதும்.. எனது அரசியல் அனுபவமும் ஒன்று. – புளொட் தலைவர் சித்தார்த்தன் பதில்

பங்காளிக்கட்சிகளிற்கு சமஷ்டி பற்றி தெரியாது என நேற்று சுமந்திரன் பேசிய குசும்பு பேச்சிற்கு, பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.இது தொடர்பாக இன்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இன்று ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில்- “தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்தில் இருந்தே அரசியல்ரீதியாக அவர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறேன். எனது தந்தையாரான தர்மலிங்கம் 1972 இல் தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்திருந்தார். அதுவும் சமஷ்டியை அடிப்படையாக கொண்டதுதான்.
1985 திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். சந்திரிகா குமாரதுங்கா நியமித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவராக இருந்து, அப்போதைய தீர்வுபொதி உருவாக்கத்திற்கு உழைத்திருந்தேன். அப்போது, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு இதைப்பற்றி நீண்ட விவாதங்கள் நடத்தியிருந்தோம்.
சமஷ்டி என்றால் என்னவென அரசியல்ரீதியாக ஆழமாக எனக்கு நன்றாகவே தெரியும். அதை எனக்கு சுமந்திரன் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை“ என சூடாக பதிலளித்துள்ளார்.
இதேவேளை சுமந்திரனின் நேற்றைய பேச்சு ரெலோ முகாமையும் சூடாக்கியுள்ளதை அறிய முடிகிறது. ரெலோ தரப்பின் பதிலும் இன்று அல்லது நாளை வெளியாகுமென தெரிகிறது.