க.ஹம்சனன்
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தியின் 22 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த மாணவி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமான செம்மணிப் பகுதியில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

கிருஷாந்தி குமாரசுவாமி கடந்த 1996 ஆம் ஆண்டு சக மாணவியின் மரண வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அவரை தேடிச் சென்ற அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் உட்பட்டோரும் இராணுவத்தால் படுகொலை செய்யப்ட்டனர்.

இந்நிலையில் இப் படுகொலை இடம்பெற்ற 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண பேரவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா, மாணவியின் சடலத்தை வெளிக்கொண்டுவர முன்னின்று செய்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர்களான சயந்தன், கஜதீபன், குகதாசன், ஜெயசேகரம் மற்றும் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கொல்லப்பட்டவர்களின் நினைவாக வறிய நிலையில் உள்ள 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. (நன்றி தினக்குரல் 08.09.2018)