க.ஹம்சனன்-

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் மாத்திரமே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 22 ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மண்ணிலே கடந்த காலத்தில் கிருஷாந்தி மாத்திரமல்ல அவரை போலவே பலர் கொல்லப்பட்டார்கள். அதில் எதுவுமே சம்பந்தப்படாத குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவ்வாறு குழந்தைகள் கொல்லப்பட்டமையானது எமது சமூகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அநீதி என்பதுடன் சமூகத்தை அழிப்பதற்கான முயற்சியும் ஆகும்.

இனப் படுகொலைகளுக்கு இந் நாட்டிலே தீர்வு கிடைக்காது. அதற்கு சர்வதேச ரீதியிலான நீதி விசாரணை இடம்பெறுவதனூடாக மாத்திரமே நீதி கிடைக்கும். அவ்வாறான சர்வதேச நீதி விசாரணை ஒன்று அமைக்கப்படும் போதுதான் இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிவரும்.

எமது மக்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டத்தினூடாகவே சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல இனப் படுகொலைக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டமும் தொடரும் என்றார்.
(நன்றி தினக்குரல் 08.09.2018)