இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்றுகாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் இவர்கள், இந்தியாவின் அரசியல் தலைவர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இந்திய பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.