வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தினூடாக வியட்நாமின், ஹெனொய் நகரத்தைச் சென்றடைந்தார்.

ஆசியான் அமைப்புக்குரிய நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாடு இன்று ஹெனொய் நகர தேசிய மாநாட்டு மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது. வியட்நாமுக்கு சென்ற பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினரை வியட்நாமின் தகவல் மற்றும் தொடர்பாடல் அலுவல்கள் பதில் அமைச்சர் கியென் மான் ஹங் அவர்களும் வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்கள் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் குழுவினரும் நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

ஹெனொய் நகர நொய் பாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட வாகனப் பேரணி மூலம் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினர் தங்கியுள்ள லொத்தே ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கே ஹோட்டல் முகாமைத்துவக் குழுவினர் மற்றும் வியட்நாமிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினரை வரவேற்றனர்.

பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேராவும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.