பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் கட்சியின் பிரதேச சபை அங்கத்தவர்கள், செயற்பாட்டு அங்கத்தவர்கள் மற்றும் இளைஞர் அணியினருக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (13.09.2018) யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்றது.

கட்சியின் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பிரதேச சபை தவிசாளர் தர்சன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டு அங்கத்தவர்கள் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது தற்கால அரசியல் நிலைவரங்கள், வடக்கு மாகாணசபைத் தேர்தல், முதலமைச்சர் தொடர்பான விடயங்கள், உள்ளுராட்சி மன்றங்களின் திறம்பட இயங்க விடாது செய்வதில் மாற்றுக் கட்சிகள் மிகக் கவனமாக செயற்பட்டுக் கொண்டிருப்பது, கட்சியின் பிரதிநிதிகள் மக்களுக்குச் தேவையான சேவைகளை சரியான முறையில் செய்வதற்கான முயற்சிகளை எடுப்பது என்பன பற்றியும், தீர்வுத் திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக ஆராயும்போது, குறிப்பாக அண்மையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள தொகுதிக்கு 100 மில்லியன் ஒதுக்குவதாக கூறியுள்ள கிராம எழுச்சித் திட்டம் மற்றும் கிராம அபிவிருத்திக்கான விசேட நிதியாக 20மில்லியன் ரூபாய் ஒதுக்குகின்ற செயற்திட்டத்தின் பிரேரணைகள் பற்றியும், இது சம்பந்தமாக அங்கத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மிக ஆழமாக ஆராயப்பட்டது. அத்துடன் கடந்த வருட இறுதியில் ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாவில் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள், அதனூடான மக்களுக்கான பயன்பாடுகள், அதன் பூரணத்துவம், பயன்பாடு என்பவை பற்றியும் ஆராயப்பட்டது.