திருகோணமலை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இன்றுகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5ற்கும் 3.8ற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறியுள்ளார். இன்று அதிகாலை 12.35 இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த நில நடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என சந்திரவிமல் சிறிவர்தன கூறியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகர், கிண்ணியா, மூதூர், தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், எவ்வித பாதிப்புகளும், அனர்த்தங்களும் இடம்பெறவில்லை எனவும், நிலையம் கூறியுள்ளது. இதேவேளை இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.