அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்றுகாலை முதல் 8 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

9 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுவிக்குமாறு கோரியே மேற்படி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம் மீதான வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தம்மை விடுவிப்பதற்கான வழக்கு விசாரணைகளில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின், குறுகிய கால புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறும் தமிழ் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக துசார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.