முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 91வது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் தலைவர் நவாலியூர் க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுமாலை 4.30மணியளவில் யாழ். பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), சிறப்பு விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), கௌரவ விருந்தினராக அ.வரதராஜப்பெருமாள் (முன்னாள் முதலமைச்சர் வடக்கு கிழக்கு மாகாணசபை) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சுகிர்தன் ஆகியோரும், நடராஜா (பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்) ராஜேந்திரம் (மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்), மகேஸ்வரி ஆகியோருடன் அ.அமிர்தலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக பழகியவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வின்போது வடமாகாணம் முழுவதிலுமான பாடசாலைகளில் நடைபெற்ற அ.அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றவருக்கு தங்கப்பதக்கமும், இரண்டாம் இடத்தைப் பெற்றவருக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் இடத்தைப் பெற்றவருக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. நன்றியுரையினை அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையைச் சேர்ந்த தங்கமுகுந்தன் அவர்கள் ஆற்றினார்.