தமிழக அரசாங்கத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பொது நூலகத்திற்கு 50,000 புத்தகங்களை கையளித்தலும்,

வட மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், வாசிகசாலைகளுக்குமான புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதியை கையளிக்கும் மாபெரும் நிகழ்வும் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்றுகாலை 10மணியளவில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. நிகழ்வுகளை கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் எஸ். தியாகு தொகுத்து வழங்கினார். வரவேற்புரையினை யாழ். மாநகரச முதல்வர் ஆர்னோல்ட் நிகழ்த்தினார். தொடர்ந்து விருந்தினர்கள் புத்தங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும் 83 பாடசாலைகள் மற்றும் வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான காசோலைகள் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் தமிழக கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதெவ், சட்டமன்ற உறுப்பினர், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம், கல்விப் பணிப்பாளர் நந்தசிறி, வட மாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன்,

இந்நிகழ்விற்கு காரணகர்த்தாவான மறவன்புலோ சச்சிதானந்தம், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநகர்கள், அரச உத்தியோகத்தர்கள். பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள். தமிழக அரசாங்கம் ஒரு லட்சத்து நான்காயிரம் புத்தகங்களை வழங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.