அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,

சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்றுபிற்பகல் சந்தித்தோம். அவர்களில் நால்வரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. ஏனையவர்களும் பலவீனமடைந்தே காணப்படுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களில் அநேகமானவர்கள் மிக நீண்டகாலமாக அதாவது ஒன்பது பத்து வருடங்களாக சிறையில் இருந்துள்ளதாகவும், தம்மை குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். இது சம்பந்தமாக அரசுடன் கதைக்கும்படி கேட்கின்றார்கள்.இது சம்பந்தமாக நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அரசுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆயினும் அரசாங்கம் இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றது. எனினும் இன்னும் வலுவான அழுத்தங்களோடு பேசி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்போம். நீங்கள் எந்த நடவடிக்கையை எடுத்தாலும் அரசாங்கம் ஓரிரு நாட்களுக்குள் அதைச் செய்துவிட மாட்டாது.

உங்களது உடல் நிலையும் தாங்கமாட்டாது. ஆகவே, உங்களுடைய போராட்டத்தை உடனடியாக நிறைவுசெய்யக்கூடிய விதத்தில் நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். நாம் இதுபற்றி அரசாங்கத்திடம் கதைக்கின்றோம். உங்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்கான முயற்சிகளை முழுமையாக எடுப்போம். அத்துடன் இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரவும் முயற்சிப்போம் என்று அவர்களிடம் கூறினேன்.

இதன்போது, திடமாக ஒரு முடிவைக் தந்தால், அதன் பிறகு உணவுதவிர்ப்பு போராட்டத்தைக் கைவிடுவது பற்றி யோசிக்கலாம் என்று அவர்கள் கூறினார்கள் என்றார்.