கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற 29வயதான நடராசா போதநாயகி என்ற இவர் பிற்பகல் 2.30 மணியளவிலிருந்து காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போயுள்ளதாக நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்களில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்றுகாலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்றுபகல் சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆசிகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நேற்று மதியம் தனது கணவனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து திருகோணமலைக்கு வருமாறு உயிரிழந்த பெண் கூறியுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர் முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாக தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.