முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது Commandeur de la Legion D’Honneur வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளித்தார். முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க இலங்கையின் நான்காவது ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதற்கு முன்னர் அவர் மேல் மாகாண முதலமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி குமாரதுங்க தற்போது பல கௌரவ பதவிகளை வகித்து வருகிறார்.

அவற்றில் முன்னாள் ஜனநாயக ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கான உலகளாவிய பிரதான மன்றம், உலகளாவிய தலைமைத்துவ மன்றம், உலகளாவிய கிளின்டன் நிலையம் என்பவற்றிலும் பல கௌரவ பதவிகளை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் தலைவராகவும் செயலபட்டுவருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.