மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் உட்பட நான்கு குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான கலைமுகிலன், வீ. பாலமுருகன் மற்றும் ரகுநாதன் ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குற்றத்திற்காக அவர்களுக்கு 2500 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மிரட்டல் மற்றும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகரின் மூக்கு கண்ணாடியை சேதப்படுத்தியதற்காக 3000 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் பதற்ற நிலமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 3000 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாகவும் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சாரை தாக்கியமைக்காக 1000 மலேசிய ரிங்கிட்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.