தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அந்த போராட்டம் இடம்பெற்றது. உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கக்கோரியும் இந்த போராட்டம் இடம்பெற்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசியல் கைதிகள் விடயமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனுராபுரம் சிறையில் 8 அரசியல் கைதிகள் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் நேற்று முன்தினம் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது.

நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோருடன் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடலில் பங்குபற்றி இருந்தார். இதன்போது ஜனாதிபதி நாடு திரும்பிய பின் இது தொடர்பில் மீண்டும் கூடி ஆராய முடிவு செய்யப்பட்டது. அதேநேரம் எதிர்வரும் செவ்வாய்கிழமை சட்ட மா அதிபர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவும்; நீதியமைச்சர் இணக்கம் தெரிவித்தாகவும் கூறப்படுகின்றது.