வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி இன்று வவுனியா தெற்கு வலக கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் கா.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புகள் உள்ள நிலை, கடந்த 10 மாதங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாமையினால் கல்வி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பான முறையான நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளதாக தெரிவித்தும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துமே பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது பாடசாலைக்கு அதிபரை நியமி, மாணவர்களின் கல்வியை பாதிப்படையச்செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர். இதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம். பி. நடராஜா குறித்த பாடசாலைக்கான அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத்தேர்வுகள் முடிவடைந்து

மாகாண கல்வி திணைக்களத்தினால் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் உத்தியோகபூர்வமான பயணமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்தமையினால் இதுவரை கையொப்பமிடவில்லை எனவும் தெரிவித்ததுடன் எதிர்வரும் புதன்கிழமை பாடசாலைக்கான அதிபர் நியமிக்கப்படுவார் எனவும் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.