வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மூன்று அரசியல் கைதிகள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வருட புனர்வாழ்வின் பின்னர் இவர்கள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான தொழிற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் வன்னி பிராந்தியப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவர்களை சமூகமயப்படுத்துவதற்கான நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி கெப்டன் சுரங்க எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு நிலையத்தின் வன்னி பிராந்தியப் பணிப்பாளர் கேர்ணல் அசேல ஒபேசேகரவும் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான அருமைநாயகம் புருஷோத்தமன்,

மட்டக்களப்பைச் சேர்ந்த 53 வயதான வீரக்குட்டி கமலநாதன் மற்றும் லிந்துலை – பம்பரகலையைச் சேர்ந்த 38 வயதான கணேசன் புஷ்பராஜ் ஆகிய மூன்று பேரும் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருக்கு மாத்திரமே தற்போது புனர்வாழ்விற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது. இதுவரை 10,152 பேர் புனர்வாழ்வின் பின்னர் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.