மாகாணசபை குறித்து குற்றம் சொல்வதற்கு மத்திய அரசிற்கு எந்த அருகதையும் இல்லை என வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கால்நடை அபிவிருத்தி திணைக்கள பயிற்சி நிலையத்தில் ஒன்பது மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிராந்திய பயிற்சி நிலைய கட்டத்தினை 02.10.18 செவ்வாய்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இருக்கின்ற சொற்ப அதிகாரங்களையாவது பயன்படுத்தக்கூடிய முறையிலே மத்திய அரசு செயற்படாமல் பல அதிகாரங்களை மாகாணசபையில் இருந்து பறித்தெடுத்து விட்டு மாகாண சபை குறித்து குற்றம் சொல்வதற்கு மத்திய அரசிற்கு எந்த அருகதையும் இல்லை.
மாகாண சபையினுள்ளும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றது. எமது சமூகத்தினுடைய சாபக்கேடு எங்களுக்குள்ளே நாங்கள் அடிபட்டுக்கொண்டுதான் இருப்போம்.
ஆனால் நாங்கள் செய்ய வேண்டிய கடமையில் இருந்து என்றும் தவறியது கிடையாது. மக்களிற்கு ஆற்ற வேண்டிய சேவைகள் மற்றும் கொடுக்கப்பட்ட நிதியின் மூலம் உச்சப்பயனை அடைய வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் யாரும் தவறு செய்யவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்’ என தெரிவித்துள்ளார்.