யாழ். சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது சம்பந்தமான கூட்டம் இன்றுமாலை 4மணியளவில் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் குமாரவேல் அவர்களின் தலைமையில் சுன்னாகம் தபாலகத்தில் இடம்பெற்றது.

இதில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். பிராந்திய அஞ்சல் அதிபர் திருமதி மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால் நிலைய தபாலதிபர் திருமதி ராஜராஜன், வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சன், சபா புஸ்பநாதன், பேரின்பநாயகம் உள்ளிட்ட சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், முன்னாள் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராஜா, யுகராஜ் மற்றும் தபால்நிலைய அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். மேற்படி தபால் நிலையத்திற்கான காணி ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பே சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத்தினரால் பெறப்பட்டிருந்தது. இதில் தபால் நிலையமொன்றை நிறுவவேண்டுமென்பதில் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வந்தநிலையில் இப்போதுதான் அது கைகூடியிருக்கின்றது.

மேற்படி தபால் நிலையக் கட்டிடத்திற்கான திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு முழுமையான மதிப்பீடு 260 லட்சம் ரூபாவாகவுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் கௌரவ மனோகணேசன் அவர்கள் இதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளார்.

இதன்படி 157லட்சம் ரூபாவினை முதற்கட்ட வேலைக்காக அமைச்சர் மனோகணேசன் அவர்கள் வழங்கியுள்ளதோடு, மிகுதிக் கட்ட வேலைக்கான நிதி பகுதிபகுதியாக வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார். அவருக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, அவரை கௌரவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று இங்கு உரையாற்றியவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இந்த வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் கூட்டம் நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான இடத்தினை அனைவரும் பார்வையிட்டார்கள்.