மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய உதயன் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கபிலன் மூலம் பிரேரிக்கப்பட்டு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி, வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் உள்வாங்கப்பட்டவையாகும். மேற்படி பத்திரிகைச் செய்தியினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றுகாலை வலிகிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கபிலனுடன் புத்தூர், அச்சுவேலி பகுதிகளுக்குச் சென்று குறித்த வீதிகளை நேரில் பார்வையிட்டார். அங்கு பல வீடுகள் இருப்பதைக் குறிப்பிட்டு, அந்த வீதிகள் தேவையான வீதிகளே என்றும் குறித்த வேலைத் திட்டத்தில் எந்த தவறும் இல்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இரா. செல்வராஜாவும் பாராளுமன்ற உறுப்பினருடன் சென்றிருந்தார்கள்.