யாழ். கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஸ்தாபகர் இந்துப்போட் அமரர் சு.இராசரத்தினம் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9மணியளவில் யா.கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் முதல்வர் காசிநாதர் குணசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் நிகழ்வில் இந்துப்போட் இராசரத்தினம் அவர்களின் உறவினரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் சுந்தரசிவம், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கௌரவித்து அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் தேவாரம் என்பன இடம்பெற்று ஸ்தாபகரின் சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. தொடர்ந்து, நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகளைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு, பிரதம விருந்தினரின் உரை என்பன இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.