அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தனது யாழ். விஜயத்தின்போது சுன்னாகம் மத்திய சந்தையினை இன்று (10.10.2018) நேரில் பார்வையிட்டார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற முன்னாள் அதிபர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை ஆற்றவந்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் பேருரை நிகழ்த்தியபின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுன்னாகம் மத்திய சந்தைப் பகுதிக்கு சித்தார்த்தன் அவர்களுடன் சென்று மத்திய சந்தையின் நிலைமைகளைப் பார்வையிட்டார். இதன்போது அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், சந்தையின் புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு செய்வது தொடர்பாக நெதர்லாந்து தூதுவருடன் இருவரும் சென்று கலந்துரையாடவுள்ளதாக கூறினார். மேற்படி சந்தை முன்பு நெதர்லாந்து அரசாங்கத்தினால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் இந்த விஜயத்தின்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா, அமைச்சரின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சந்தை வியாபாரிகளும் உடனிருந்தனர்.