யாழ். சுன்னாகம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையக் கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்கான வேலைகள் இன்று (11.10.2018) வியாழக்கிழமை காலை 8.00மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன. மேற்படி சனசமூக நிலையத்திற்கான முதற்கட்ட வேலைகள் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்றிருந்தது. அதன்பிறகு அதன் மிகுதி வேலைகள் நடைபெறாதிருந்தன.

இந்நிலையில் நிறைவுபெறாதுள்ள சனசமூக நிலையக் கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து 5லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். இதன்கீழ் இன்று கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், சமூக ஆர்வலருமான இரத்தினசிங்கம் கெங்காதரன், கலைவாணி சனசமூக நிலையத்தின் போசகர் திருமதி சிவாஜினி, சனசமூக நிலையத்தின் தலைவர் கௌதம் உள்ளிட்ட சனசமூக நிலைய நிர்வாகிகள், முன்பள்ளி விளையாட்டுக் கழக அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மேற்படி கட்டிட வேலையினை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யவேண்டும் என்றும், கட்டிட வேலையைப் பூர்த்திசெய்த பின்பு அதற்குத் தேவையான மிகுதி விடயங்களை தான் பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதன்போது உறுதிகூறினார்.