சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும், தொடர்ந்து 29நாட்களாக அவர்கள் உண்ணாவிரதமிருப்பதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிரந்தர உடல் பாதிப்புகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அரசியல் கைதிகளிடம் போதகர் சக்திவேல் அவர்களின் ஊடாக கேட்பதோடு, வெளியே இருக்கக்கூடிய சிவில் சமூகம் அவர்களின் சார்பில் இப்போராட்டத்தை முன்னெடுத்து அவர்களின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு, அரசாங்கத்திடமிருந்து சரியான உத்தரவாதம் பெறப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் முழு முயற்சி எடுப்பதென்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் சிறைக்கைதிகளினுடைய விடுதலை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிமொழி கிடைக்கப்பெறாதவிடத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று கூட்டமைப்பைக் கேட்பதெனவும் கருத்துக்கள் கூறப்பட்டது.

இன்றைய சந்திப்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் இணைப்பாளர் போதகர் சக்திவேல், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன், மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.