யாழ். விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய கலையரங்க மண்டப திறப்பு விழாவும் பரிசில் நாள் நிகழ்வும் இன்று (18.10.2018) வியாழக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர் இரத்தினம் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி பிரதேசசபையின் உதவி தவிசாளர் செல்வரத்தினம் மயூரன் ஆகியோரும், மதிப்புறு விருந்தினர்களாக வீரகத்தியார் காசிநாதர், வைத்திலிங்கம் கிரு~;ணபிள்ளை, கந்தையா நாகலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதையடுத்து கொடியேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து புதிய அரங்க மண்டபம் திறந்துவைத்தல், பெயர்க்கல் திரை நீக்கம், மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றன. தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை, வரவேற்பு நடனம், என்பன இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது சாதனையாளர்கள் கௌரவிப்பும், புலமைப்பரிசில் நன்கொடை வழங்கலும், நிதிய உதவிப்பணம் வழங்கலும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் மற்றும் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்று, நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.