யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் க.கராளசிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தலைவர் சோ.பரமநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம் வரவேற்புரை என்பன இடம்பெற்றன. ஆசியுரையினை சிவஸ்ரீ ச.வைத்தீஸ்வரக் குருக்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர் உரை என்பன இடம்பெற்று, மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது 2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சையில் விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியர் மற்றும் 2018ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், நடன ஆசிரியர் நடராஜா குமரவேல் அவர்கள் பிரதம விருந்தினரால் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து நடன ஆசிரியர் குமரவேல் அவர்களது நெறியாள்கையில் பல நடன நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பேச்சு, பட்டிமன்றம், நாடகம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் பெருந்தொகையான ஊர் மக்கள் கலந்து        கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.