தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தென்னிலங்கை இளைஞர், யுவதிகள் அநுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்களுக்கும் யாழ். கோப்பாய் பிரதேசத்தின் உரும்பிராய் பகுதி இலக்குமி இளைஞர் கழக உறுப்பினர்களுக்குமிடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்வுத் திட்டம் இடம்பெற்றது.

இதன்கீழ் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் இங்குள்ள கோப்பாய், உரும்பிராய் பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளின் வீடுகளில் ஐந்து நாட்கள் தங்கிநின்று இங்குள்ள உணவுப் பழக்கவழக்கங்கள், இங்குள்ள கலாச்சாரம் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டு இங்குள்ள சுற்றுலா மையங்களையும் சென்று பார்வையிட்டிருந்தனர். மேற்படி நிகழ்விற்கான இறுதி வைபவமும், அவர்களை வழியனுப்புகின்ற நிகழ்வும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி ஸ்ரீமேனன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது தென்பகுதியிலிருந்து வருகை தந்திருந்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும், அவர்களுக்கான நினைவுப் பரசில்களும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுகராஜ் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.