யாழ்ப்பாணம் ஊரெழு KMI மற்றும் உரும்பிராய் லோகா அகடமி இணை நிறுவனங்களின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் (21.10.2018) பிற்பகல் 3.30மணியளவில் இணை நிறுவனங்களின் ஆசிரியர் மு.கயூரகன் தலைமையில் ஊரெழு KMI முன்றலில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன், வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சந்திரலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி மிமலாதேவி விமலநாதன், உரும்பிராய் இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி பொன்மலர் தர்மலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

ஆலய வழிபாடு இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றதையடுத்து மாணவர்களின் தமிழ், சிங்கள, ஆங்கில பேச்சுகள் கவிதை என்பன இடம்பெற்றன. அத்துடன் விருந்தினர்கள் உரைகளும், பரிசளிப்பும் இடம்பெற்றது.

இதன்போது 2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சையில் விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியர் மற்றும் 2018ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதல் புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும், கேடயங்களும் வழங்கப்பட்டதோடு, 2018 ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற ஒன்பது மாணவ, மாணவியர்க்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் பல்வேறு நடன நிகழ்வுகள், பட்டிமன்றமும் நடைபெற்றது.