Header image alt text

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

இதேவேளை, இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சட்டமூலத்திற்கு தாம் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பிரதிகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சபை அமர்வு இன்று முற்பகல் 10மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, சபாநாயகரின் அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டபோதே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இலங்கையில், ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்து, அம்மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளமையானது, பலரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதென,

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகள் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போதே, அந்த நாடுகளின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டிணன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று உத்தரவிட்டார்.

நகரசபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமநாதன் ஆகிய இருவரும், கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். Read more

2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் 2018 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2017 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இம்முறை அது இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.