கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டிணன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று உத்தரவிட்டார்.

நகரசபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமநாதன் ஆகிய இருவரும், கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று முன்தினம் கைதாகியிருந்த கொமாண்டர், இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபருக்கு, விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, நீதவான் உத்தரவிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.