மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பதற்கு, காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவற்றை, எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் விடுவிப்பதென, ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான, நேற்றைய கூட்டத்திலேயே மேற்கண்டவாறு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நேற்று (25)நடைபெற்றது. இதில், பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதய குமார், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கே.துரைராஜ சிங்கம், முப்படைகளின் பிராந்திய உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, கோறளைப் பற்று வடக்கு, மண்முனை தெண் எருவில் பற்று உட்பட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சல் தரைக்காக 25 ஆயிரத்து 802 ஏக்கர் நிலப்பரப்பை வழங்குமாறும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுக் கட்டடங்களிலுள்ள இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.