மிக விரைவாக பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற வழி அமைத்து கொடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாக செயற்படுமாறும் குறித்த கடிதத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் அண்மைக் கால நடவடிக்கைகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட ரீதியாக செயற்படுவது ஜனநாயகத்தின் முக்கியமான விடயம் எனவும் இலங்கையின் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து வன்முறைகளில் ஈடுபடுவதனை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அமைதியாக செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாங்கள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் அமைதியான வழிகளில் சுமூகமான அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு மதிப்பளித்து நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.