வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் பிரிவினர் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல், உறக்கத்தில் இருந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வடமராட்சி, குடத்தனையில் இன்று அதிகாலையில் 4.30 மணியளவில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 50 வயதுடைய எம். சித்திரவடிவேல் என்பவரும் 40 வயதுடைய அவரது மனைவியான ஜெயந்தி என்பருமே படுகாயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது மனைவி தலையில் ஆழமான வெட்டுக்காயத்துடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.