பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே, அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இரவு சென்றிருந்த போது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அமைச்சரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகினர். எனவே, இச்சம்பவத்தைக் கண்டித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணத்துங்கவை கைது செய்யும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடருமென, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலங்கைச் சுதந்திரத் தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.